ஜனநாயகத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லி வருகிறார்கள். இன்னும் அமைச்சர் பெருமக்கள் ஒருமையில் பேசி வருகிறார்கள். மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் போராடுவது எல்லாம் தனிப்பட்ட விருப்பம் என்கிறார்கள். என்ன ஆணவம் இந்த அரசுக்கு? இவர்களை கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதலமைச்சர் கமல்ஹாசன் கேள்வி கேட்டால் அவர் அரசியலுக்கு வரட்டும் பதில் சொல்கிறேன் என்கிறார். அவருடைய பிரச்சனை கமலஹாசனா அல்லது அவருடைய கேள்விகளா?
முதலமைச்சரிடம் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்! வந்தால் தான் பதில் சொல்வேன் என்கிறாரா இந்த முதலமைச்சர்? மனிதன் ஒரு அரசியல் விலங்கு என அரிஸ்டாட்டில் சொன்னதுப் போல எடப்பாடியும் அரசியல் மிருகம் ஆகி நிற்கிறார் போலும். முதல்வர் கமலஹாசனுக்கு மட்டும் அல்ல! அவருக்கு வாக்களித்த, வாக்களிக்காத, குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட பதில் சொல்ல கடமைப்பட்டவர் ஆவார்.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தான் முதல்வர் இருக்கிறார். குப்பனும், சுப்பனும் போட்டப் பிச்ச்சை தான் இந்த கோட்டைகளும், ராஜ மகுடம், பதவி பரிபாலங்கள் அனைத்தும். மக்களின் கேள்விகளை களத்தில் எதிர்கொள்ளுங்கள் ! பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லாதீர்கள் ! போராடுவது தனிப்பட்ட விருப்பம் என்றால் மக்கள் உங்கள் ஆட்சியை தூக்கி எறிவதையும் தனிப்பட்ட விருப்பம் என்பார்கள். மொத்தத்தில் முதல்வர் உட்பட அமைச்சர் பெரு மக்கள் அனைவருக்கும் நாவடக்கம் தேவை!