10 வருஷம் இலவு காத்த கிளியின் பழி வாங்கும் படலம்... ஈபிஎஸ் & ஓபிஎஸ் சாடல்!!

வியாழன், 20 ஜனவரி 2022 (20:39 IST)
கே.பி.அன்பழகனுக்கு தொடர்பான இடங்களில் நடந்த சோதனைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம். 

 
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதுவரை கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 2.65 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அன்பழகனுக்கு நெருக்கமான கனிம வளத்துறை அதிகாரி ஜெயபால் வீட்டில் ரூ.40 லட்சம், ரூ.20 லட்சம் வாய்ப்பு தொகை ஆவணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கான ஆவணங்கள் என ரூ. 2.65 கோடி சிக்கியுள்ளதாம். 
இதனிடையே முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்பான இடங்களில் நடந்த சோதனைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோரக் கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது திமுக அரசு. ஏற்கெனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய திமுக, மீண்டும் இதனை திரும்ப செய்துள்ளது. அரசியல் சூழ்நிலைகளை திசை திருப்ப, தந்தையார் வழியில் தனயனும் முயற்சி செய்கிறார்.
இலவு காத்த கிளியாக 10 ஆண்டுகளாக சட்டமன்றத்திற்கு வெளியே முதல்வர் நாற்காலிக்காக காத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அந்த இருக்கை கிடைத்த உடனே திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கிறது. 
 
எம்ஜிஆர் வழிவந்து அவரின் பாசறையில் பயின்றவர்கள் நாங்கள். அஞ்சிப் பிழைக்கவும், அண்டிப் பிழைக்கவும், சுரண்டிப் பிழைக்கவும் எந்தவித தேவையும் எங்களுக்கு இல்லை. பல சோதனைகளையும், பல இயக்கப் பிளவுகளையும் கண்டு வென்ற மிகப்பெரிய ஆலமரம். இதை திமுக ஒருபோதும் சாய்த்துவிட முடியாது. 
ஆட்சிக் கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியைப் பங்குபெற வைக்க முடியாத திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய நிர்வாகத் திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுப்டடு வருகிறார்.
 
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்