விமான நிலையத்தில் மயங்கி விழுந்த துரைமுருகன்: அப்பல்லோவில் அனுமதி!
ஞாயிறு, 13 நவம்பர் 2016 (13:43 IST)
திமுக மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உடல் நலக்குறைவால் கடந்த 50 தினங்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் திமுக முக்கிய தலைவர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பல்லோ வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சென்று பார்வையிட்டார். அப்பல்லோவில் அதிமுக, திமுக கட்சியினர் குவிந்து வருகின்றனர்.