பழனி அருகே, தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் சாய்ந்து விழுந்தார். உடனே சுதாரித்த அருகிலிருந்த கண்டக்டர், பேருந்தை கையால் பிரேக் போட்டு நிறுத்தியதால் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பழனி அருகே, தனியார் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் சுயநினைவை இழந்து சரிந்து விழுந்தார். நல்லவேளையாக, அருகில் இருந்த கண்டக்டர் உடனடியாக சீராக செயல்பட்டு, கைகளை கொண்டு பேருந்தின் பிரேக்கை அழுத்தி அதை நிறுத்தினார். இதன்மூலம், ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருந்த ஓட்டுநர் பிரபுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரியவந்தது. இதையறிந்த பேருந்து பயணிகள் மற்றும் கண்டக்டர், பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவலை பெற்ற போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் பிரபுவின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.