அம்ருதா ஜெ.வின் மகளா? சோபன்பாபுவின் மகன் டி.என்.ஏ போதும் - அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டி

திங்கள், 18 டிசம்பர் 2017 (10:44 IST)
பெங்களூரை சேர்ந்த அம்ருதா ஜெயலலிதாவின் மகளா என கண்டுபிடிக்க நடிகர் சோமன்பாபுவின் டி.என்.ஏ இருந்தால் போதும் என ஜெ.விற்கு சிகிச்சையளித்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

 
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான்  மறைந்த முதல்வர் ஜெ.வி மகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அவரை வலியுறுத்திய நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஜெ.விற்கு ஒரு மகள் உண்டு அது அம்ருதாவாக இருக்கலாம். டி.என்.ஏ சோதனை செய்து பார்த்தால் உண்மை தெரியும் என ஜெ.வின் உறவினர் லலிதா என்பவரும், ஜெ.வின் அண்ணன் வாசுதேவனும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
 
அந்நிலையில், ஜெ.விற்கு அக்குபஞ்சர் சிகிச்சையளித்த மருத்துவர் சங்கர் சில பரபரப்பு தகவல்களை கூறிவருகிறார். ஜெ.வின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனில் சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் கொடுத்தது அவருடைய உடல்நலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். 2016 சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன். என்னுடைய சிகிச்சைக்கு பின்னர் அவருடைய கால் வீக்கங்கள் குறைந்து நன்றாக நடந்தார். ஆனால் ஜெயலலிதாவை அப்பலோவில் அனுமதித்தபின் பலமுறை சந்திக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை” என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், அம்ருதா பற்றி கருத்து தெரிவித்திருந்த சங்கர் “ அம்ருதா கூறுவது மாதிரி அவர் ஜெ.விற்கும், சோபன்பாபுவிற்கும் பிறந்தவராக இருந்தால், ஜெ மற்றும் சோமன்பாபுவின் மகன் ஆகியோரின் டி.என்.ஏ இருந்தால் போதும், அதை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஜெ.வின் டி.என்.ஏ கண்டிப்பாக அப்போலோ மருத்துவமனையில் இருக்கும். அதை நீதிமன்றம் மூலம் கேட்டல் நிச்சயம் கிடைக்கும்.
 
அம்ருதா என்னை சந்தித்து இதுபற்றி பேசினார். ஆனால், நீங்கள் சட்டரீதியாக அணுகிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டேன். அங்க லட்சணம், கை வாக்கு, நோய்த்தன்மை ஆகியவற்றை வைத்து அம்ருதா ஜெ.வின் மகளா என்பதை 40 சதவீதம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். மீதி 60 சதவீதத்தை டி.என்.ஏ சோதனையால் மட்டுமே கண்டறிய முடியும்.
 
போயஸ்கார்டனில் இறந்து பின்புதான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனக் கூறுவது தவறு. இறந்த ஒருவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ய முடியாது. அவருக்கு அளித்த மருந்துகளின் பக்க விளைவுகளே அவரின் மரணத்திற்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்