'மது, போதையைவிட இந்த ஒரு திரைப்படம் ஆபத்தானது: பாமக ராமதாஸ்

செவ்வாய், 8 மே 2018 (14:46 IST)
கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தை அப்படியே விட்டிருந்தால் கூட மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் மட்டுமே ஓடியிருக்கும். ஆனால் இந்த படத்திற்கு தற்போது அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் செய்து வருவதால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆவது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே திரையுலக பிரமுகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாமக தலைவர் ராம்தாஸ் அவர்களும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
 'தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்திவரும் பண்பாட்டுச் சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாகக் கருதப்படும் திரைப்படங்கள், சமூகச் சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களைத் திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
 
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் வெளியானதுமே, சமூக ஆர்வலர்கள் பலரும் என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அந்தப் படத்தால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகள் பற்றி விளக்கியதுடன், இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும், அந்தப் படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தில் இருந்தும், அப்படம் எவ்வளவு மோசமான ஆபாசக் களஞ்சியமாக இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அந்தத் திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனமும், அதை இயக்கிய இயக்குநரும் இதே பாணியிலான ஓர் ஆபாசத் திரைப்படத்தை ஏற்கெனவே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். முதல் படத்தின் வெற்றியும், வசூலும் அவர்களை மீண்டும் அதேபோன்ற படத்தைத் தயாரிக்கத் தூண்டியுள்ளது. இந்தப் படமும் வெற்றி பெற்றால், அதுவே வெற்றிக்கான சூத்திரமாக மாறி, இன்னும் பல படங்களை அதன் இயக்குநரும், தயாரிப்பாளரும் தயாரிக்கக்கூடும். இதே வழியை மற்ற இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பின்பற்றத் தொடங்கினால் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.
 
தமிழகம், இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரிப் பாசன மாவட்டங்களைச் சீரழிக்கும் வகையிலான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் ஆலை என மத்திய அரசால் திணிக்கப்படும் அழிவுத் திட்டங்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில், இதுபோன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்கள் சிந்தித்துவிடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் மதுவை வெள்ளமாக ஓட விட்டும், மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வாரி வழங்கியும் சீரழித்துக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கு, இன்னொரு ஆயுதமாகவே இது போன்ற திரைப்படங்கள் அமையும். இது மிகவும் ஆபத்தான கலாசாரம்; இது தடுக்கப்பட வேண்டும்.
 
திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவமாகும். அதை, சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக் கூடாது. இதுபோன்ற திரைப்படங்களைத் திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவைதான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.
 
பாட்டாளி மக்கள் கட்சியோ நானோ திரைத்துறைக்கு எதிரிகள் அல்ல. நல்ல திரைப்படங்களை நான் தொடர்ந்து பாராட்டிவருகிறேன். சில மாதங்களுக்கு முன் ‘அப்பா’ என்ற படத்தைப் பார்த்தேன். கல்வி  எந்த அளவுக்கு சுகமானதாகவும் சுமையற்றதாகவும், விளையாட்டு மற்றும் நீதிபோதனையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையை விளக்கும் வகையில் இருந்தது. அதேபோல, நான் பார்த்த 'தர்மதுரை' என்ற திரைப்படம், மருத்துவர்கள் எந்த அளவுக்கு மக்கள் நலன் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை வழங்கியது. இதற்காக அப்படங்களின் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பாராட்டினேன். 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'வழக்கு எண்.18/9', 'விசாரணை' போன்ற மேலும் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்து, திரையுலகம் குறித்த நம்பிக்கையை விதைத்தன. மேற்கண்ட அத்தனை படங்களும் கூட்டாக ஏற்படுத்திய நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் இந்த ஒரு படம் வெளியாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும்.
 
மது, புகை மற்றும் பிற போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளைவிட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்திவிடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களைப் பார்ப்பதிலிருந்து இளைஞர்களும் மாணவர்களும், தமிழ்ச் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல், தமிழகத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்