தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை சமாளிக்க இன்று திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அனைத்து முக்கிய தலைவர்களும், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்
நேற்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சட்டரீதியாக போராடி அவரை மீட்ட திமுக வழக்கறிஞர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது, தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்யவிடாமல் அதிமுகவினர் தடுப்பதாகவும், மேலும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் பதியப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திமுகவினர் மீது திணிக்கப்படும் பொய் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை மீட்கவும், அதிமுக அரசின் ஊழல்களை மாவட்டரீதியாக பட்டியலிடவும் ஆலோசனையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் முன்னதாக திமுகவின் ஊழல்கள் குறித்து பல இடங்களிலும் பரப்புரை செய்ததால் மக்களிடையே அதிமுக குறித்த அபிப்ராயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மாவட்டரீதியான ஊழல் பட்டியலை திமுக தயாரிப்பதன் மூலம் மாவட்டம்தோறும் அதிமுகவிற்கு எதிரான பிம்பத்தை உருவாக்கவும், திமுகவின் மீது அபிப்ராயத்தை ஏற்படுத்தவும் இது பயன்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.