திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி இறந்த பிறகு அவரது மகனும், செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைவராக பொறிப்பேற்றார். எந்த கட்சியானாலும் அந்தந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போஸ்டர் அடிப்பதற்கு ஒரு ஒழுங்குமுறை உண்டு.
அதன்படி, திமுகவிலும் கலைஞர் இருந்தபோது ஒரு ஒழுங்குமுறை இருந்தது. எந்த போஸ்டர் அடித்தாலும் கலைஞர் புகைப்படம் பெரிதாக அதில் இருக்கும். ஓரத்தில் வட்டத்திற்குள் பெரியார், அண்ணா புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். கலைஞருக்கு பிறகு தலைவரான ஸ்டாலின் ஆரம்பம் முதற்கொண்டு கலைஞர் புகைப்படத்தை போஸ்டர்களில் பயன்படுத்தியே வந்தார்.
சமீபத்தில் தூத்துக்குடி இளைஞரணி அமைப்பாளர் ஒருவர் அடித்த போஸ்டரில் தலைவர் கலைஞரின் புகைப்படம் இல்லாமல் ஸ்டாலின், உதயநிதி மற்றும் கனிமொழி படங்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளன. இது திமுக தங்கள் தலைவரையே மறந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒருப்பக்கம் திமுக இளைஞரணி உதயநிதியை முன்னிறுத்தியே போஸ்டர்கள் அடிப்பதாகவும், ஸ்டாலின் புகைப்படத்தையே அதில் சிறியதாகதான் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு சாரார் முன்னர் போஸ்டர்களில் கடைபிடித்து வந்த ஒழுங்குமுறைகளை தற்போது தலைமை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதில்லை என்பதால் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதாகவும் பேசி கொள்கின்றனர்.