40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுக வசம்? ஆட்சியை கைப்பற்ற திமுக பகீரத முயற்சி!

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (10:38 IST)
சசிகலா முதல்வராவதை விரும்பாத 40 அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு திமுகவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றவும் திமுக முயற்சி செய்து வருகிறது.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு முதல்வர் பதவியை அடைய துடிக்கிறார் சசிகலா. சசிகலா முதல்வராக வருவதை அந்த கட்சியினரே விரும்பவில்லை. துப்பாக்கி முனையில் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என அதிமுக நிர்வாகிகளே கூறுகின்றனர்.
 
அதிமுகவின் இந்த சூழலை பயன்படுத்தி அந்த கட்சி எம்எல்ஏக்களை இழுக்க திமுக தலைமை அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அந்த உத்தரவின் படி அந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள எம்எல்ஏக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் மனநிலைக்கு வந்துவிட்டதாக தகவல்கள் கசிகின்றன.


 
 
இவர்கள் சட்டசபையில் தனி அணியாக திமுகவுக்கு ஆதரவாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட உள்ளனராம். சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கு தடையாக இருப்பதால் அவர் முதல்வராக முடியாத சூழல் நிலவுவதால் இதனை பயன்படுத்தி திமுக ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறது எனவும் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு மனு அளிக்க திமுக தயாராகி வருகிறது.
 
சட்டசபையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க திமுகவுக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திமுக எம்எல்ஏக்கள் 89 பேர், கூட்டணி எம்எல்ஏக்கள் 9 பேர் என 98 எம்எல்ஏக்கள் உள்ளனர் மீதம் அவர்களுக்கு 20 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதிமுக அதிருப்திகள் 40 பேர் இருப்பதால் திமுகவின் இந்த திட்டம் சாத்தியமாக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
மேலும் திமுக ஆட்சி அமைப்பதில் மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதால் மும்பையில் உள்ள ஒரு பாஜக பிரமுகர் மூலம் மத்திய அரசின் சம்மதத்தை பெற திமுக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.
 
இந்த பரபரப்பான சூழலில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி விரைகிறார். இந்த டெல்லி பயணத்தின் போது அவர் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசுகிறார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து முறையிட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் திமுகவுக்கு சாதகமான முடிவுகளை மத்திய அரசு எடுக்குமா? திமுக ஆட்சியை கைப்பற்றுமா என்பது அடுத்து நடக்க இருக்கும் அரசியல் நிகழ்வுகளில் தெரியவரும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்