அமமுகவின் கொள்கை பரப்புச் செயலளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் தலைவர் தினகரனுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனால் அரசியலில் அடுத்தடுத்து பரப்பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தேனி மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி என்பவரை தினகரன் நியமித்தார்.
இதனைத்தொடர்ந்து , தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் : அமமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகினாலும் கூட தொண்டர்கள் எப்பொழுதும் எங்களுடனேயே இருப்பர்கள்.
திமுக டெல்லியைப் பார்த்து பயப்படுகிறது. அக்கட்சியால் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வனை இணைத்துக்கொள்ள ஓ.பன்னீர் சம்மதிக்காததால்தால் திமுகவில் தங்க தமிழ்செல்வனை இணைத்தனர். இதன் மூலம், அவரை இயக்கியது திமுகதான் என்பது இப்போது தெரிகிறது என்றார்.
சமீபத்தில் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றது தினகரனுக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் , வரும் சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதிலிருந்து கடுமையாக அவர் உழைக்கப்போவதாகக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.