கருணாநிதியையும், திமுக-வையும் காப்பாற்றவேண்டும் - மு.க. அழகிரி

சனி, 19 ஏப்ரல் 2014 (09:23 IST)
கட்சியில் என்ன நடக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதிக்கே தெரியவில்லை. இதானால் அவரையும் திமுகவையும் காப்பாற்றியாகவேண்டும் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
 
சிவகங்கை மாவட்டத்தில் காதணி விழாவில் கலந்து கொண்ட மு.க.அழகிரி இவ்வாறு பேசியுள்ளார்.
 
கட்சியில் நடப்பது கலைஞருக்கு தெரியவில்லை. முதலில் கலைஞரைக் காப்பாற்ற வேண்டும். பிறகு கழகத்தைக் காப்பாற்ற வேண்டும். தொடர்ந்து கட்சியை விட்டு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்கிக்கொண்டே இருந்தால் தேர்தலில் எப்படி ஜெயிக்க முடியும். கலைஞரை மூலையில் வைத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். கலைஞரின் உயர்வுக்கு காரணமான தொண்டர்களை படுகுழியில் தள்ளுகின்றனர்.

பதவிக்கு ஆசைப்படாத தொண்டர்கள் என்னிடத்தில் தான் உள்ளனர். சோதனையான காலகட்டத்திலும் தொண்டர்களும், தாய்மார்களும், பெரியோர்களும் என்னிடத்தில் ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சி தருகிறது.
 
கட்சித் தொண்டனுக்காக நியாயம் கேட்டதால் என்னை வெளியே அனுப்பினார்கள். இதுகுறித்து இதுவரை எனக்கு உரிய தகவல் இல்லை. கடிதமும் அனுப்பவில்லை.
 
சிவகங்கை தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர். இவர் கட்சிக்காக என்ன தியாகம் செய்தார். கட்சிக்காக சிறை சென்றவரா? கல்லக்குடி போராட்டத்தில் கலைஞரோடு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரா? அண்ணாவைத் தெரியுமா? தி.மு.க. இங்கு மூன்றாவது இடத்திற்குதான் வரும். சிவகங்கை மாவட்டத்தில் இவரைத் தவிர வேறு ஆளே இல்லையா?.
 
என்று சரமாரிக் கேள்வி எழுப்பினார் அழகிரி.

வெப்துனியாவைப் படிக்கவும்