அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து தேர்தலில் நின்று வெற்றிபெற்றபின் அவரது ஆட்சியில் வலியுறுத்தியக் கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி. மாநிலங்கள் தங்களைத் தாங்களே சுயமாக ஆட்சி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாநிலங்களை மேற்பார்வை செய்யும் வேலையை மட்டும் மத்திய அரசு செய்தால் போதும் என்பதுவே மாநில சுயாட்சி கொள்கையாகும்.
ஆனால் காலப்போக்கில் திமுக தேசியக் கட்சியானக் காங்கிரஸோடும் பின்னர் பாஜகவோடும் கூட்டணி அமைத்ததும் நடந்தேறியது. திமுக , அதிமுக எனும் இரு திராவிடக் கட்சிகள் கோலோச்சியக் காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியக் கட்சிகள் இங்கே இரண்டாம் நிலைக் கட்சிகளாகவே இருந்தன. ஆனால் அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக வில் கலைஞரின் மறைவு ஆகியவை இரண்டுக் கட்சிகளிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
இதைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தேசியக் கட்சிகள் மக்களவைத் தேர்தலில் அதிகளவிலான சீட்களைக் கேட்டுப் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒரே ஒரு எம்.பி. மட்டுமே வைத்திருக்கும் பாஜக 37 எம்.பி.களை வைத்துள்ள அதிமுகவிடம் 5 சீட்களை வாங்கியுள்ளது. அதிமுக வின் கடந்த 2 ஆண்டு ஆட்சியில் நடந்த பல குளறுபடிகளால் மக்கள் திமுக அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளன. அதனால் இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள நிலையில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை அளித்து அதிர்ச்சியளித்துள்ளது.