மண்ணை கவ்விய தேமுதிக, பாமக, பாஜக: தேர்தலில் டெபாசிட் இழந்த கட்சிகளின் தொகுதிகள் விவரம்

புதன், 25 மே 2016 (12:08 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ஒரே ஒரு விஷயத்தை புரியவைத்தது. தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளுக்கும் மாற்றாக வேறு எந்த கட்சிகளும் கிடையாது.


 
 
இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளின் ஆதிக்கத்தால் அதனுடன் போட்டியிட்ட மற்ற கட்சிகள் துடைத்து தூர்வாரப்பட்டன. தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட பெருவாரியான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.
 
234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாமக தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் 212 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாஜக 180 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அந்த கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே டெபாசிட்டை பெற்றது.
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டு 103 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளனர். அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் டெபாசிட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 23 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 25 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 22 தொகுதிகளிலும், தமாகா 26 தொகுதிகளிலும், மதிமுக 27 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து மண்ணை கவ்வியது.

வெப்துனியாவைப் படிக்கவும்