தீபாவளியன்று காற்று மாசு, ஒலி மாசு அதிகரித்துள்ளது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

வெள்ளி, 24 அக்டோபர் 2014 (17:19 IST)
தமிழகத்தில் தீபாவளியன்று காற்று மாசு, ஒலி மாசு அதிகரித்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, பெசண்ட்நகர், நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தியாகராயநகர் ஆகிய 5 இடங்களில் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு அளவுகளை அறியும் ஆய்வை கடந்த ஆண்டைப் போலவே, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
 
மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய ஆய்வாக, காற்றுத் தரத்தின் ஆய்வு 15.10.14 அன்று காலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடத்தப்பட்டது.
 
தீபாவளி அன்று நடத்தப்பட்ட ஆய்வு, 22 ஆம் தேதி காலையில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடத்தப்பட்டது. அதுபோல் இரண்டு ஒலி மாசு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
 
சென்னை திருவல்லிக்கேணியில் நடத்தப்பட்ட ஆய்வில், தீபாவளிக்கு முந்தைய காற்று மாசு பற்றிய கணக்கெடுப்பின்படி, சுவாசிக்கும்போது உடலுக்குள் செல்லும் மிதக்கும் நுண்துகள்களின் அளவு, கந்தக டை ஆக்சைடின் அளவு, நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு ஆகியவை முறையே 37, 12, 13 என்றிருந்தன. தீபாவளியன்றைய கணக்கெடுப்பின்படி திருவல்லிக்கேணியில் அவை முறையே 297, 32, 20 என்ற அளவில் இருந்தன.
 
அதுபோல் பெசண்ட்நகரில் 49, 8, 10 என்று தீபாவளிக்கு முன்னிருந்த அளவுகள், தீபாவளியன்று 110, 14, 17 என்றும் நுங்கம்பாக்கத்தில் 34, 9,11 என்று காணப்பட்ட அளவுகள் தீபாவளியன்று 180, 14, 17 என்றும், சவுகார்பேட்டையில் 43, 13, 13 என்று காணப்பட்ட அளவுகள், தீபாவளியன்று 196, 22, 20 என்றும், தியாகராயநகரில் 145, 11, 15 என்று தீபாவளிக்கு முன்பிருந்த அளவுகள், 180, 16, 19 என்றும் உயர்ந்தன.
 
இதுபோன்ற நிலை மதுரை, கோவை, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் பெரும்பாலும் அதிகரித்திருந்தன. நெல்லை நகரம், சமாதானபுரம், பேட்டையில் குறைவான காற்று மாசு அளவிடப்பட்டது.
 
ஒலிஅளவும் மேற்கூறப்பட்ட இடங்களில் உயர்ந்திருந்தன. திருவல்லிக்கேணியில் தீபாவளிக்கு முன்பு 70 என்றிருந்த ஒலி அளவு, தீபாவளியன்று 82 ஆக உயர்ந்தது. பெசண்ட்நகரில் 59-ல் இருந்து 73-ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 62-ல் இருந்து 82-ஆகவும், சவுகார்பேட்டையில் 76 இல் இருந்து 83 ஆகவும், தியாகராயநகரில் 75-ல் இருந்து 80 ஆகவும் ஒலி அளவு உயர்ந்திருந்தது.
 
கடலூர் சேகர்நகரில் 74 இல் இருந்து 72 ஆகவும், நெல்லை நகரத்தில் 79 இல் இருந்து 72 ஆகவும் ஒலியளவு குறைந்திருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்