தீபாவளி ஏலச் சீட்டு நடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி

செவ்வாய், 27 அக்டோபர் 2015 (11:13 IST)
தீபாவளி சீட்டு நடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த, போரூரை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


சென்னை மேற்கு மாம்பலம் முத்தாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் என்.செல்வராஜ். இவர் சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரனை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். 

அந்த மனுவில், சென்னை போரூர் காளியம்மன் கோவில் 2 ஆவது தெருவைச் சேர்ந்த மயில் என்னும் இந்துமதி மற்றும் அவருடைய கணவர் குணசேகரன் ஆகியோர் நடத்திவந்த மாத ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டில் சேர்ந்து பணம் கட்டினேன்.
 
என்னை போன்று என்னுடைய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ரூ.80 லட்சம்வரை அவர்களிடம் பணம் கட்டியுள்ளனர்.
 
ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு முதிர்வடைந்த பிறகும் அவர்கள் பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டனர். தலைமறைவாக இருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். 
 
இந்த உத்தரவின் பேரில், மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையரின் வழிகாட்டுதலின் படி, தனிப்படை அமைக்கப்பட்டது.
 
இந்த தனிப்படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த அந்த தம்பதியினரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மோசடியை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
 
இது குறித்து குணசேகரன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
எனது வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை என்பதால் கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் எனது மனைவியுடன் சேர்ந்து மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தேன்.
 
இதில் நல்ல லாபம் கிடைத்தது. இதனால் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சுய தேவைக்கு பொதுமக்கள் செலுத்திய சீட்டு பணத்தை செலவு செய்துவிட்டோம்.
 
பணத்தை செலுத்தியவர்கள் பணத்தை கேட்டு வந்தால் அவர்களை மிரட்டி அனுப்பிவிடுவேன். எங்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தெரிய வந்தவுடன் நானும், எனது மனைவியும் தலைமறைவாக இருந்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களை பிடித்துவிட்டனர்.  இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குணசேகரன் கூறினார்.
 
இதைத் தொடர்ந்து பண மோசடி செய்த தம்பதியரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்