மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழியாக கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 220 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்ததாக விழுப்புரம், கடலூர் பகுதிகளில் பலருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கோயம்பேடு சந்தையில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் உட்பட 7,500 பேரை கண்டுபிடிக்கும் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடைய 73 பேர் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.