ஜெயலலிதாவின் சபதம்: சட்டசபையில் காரசார விவாதம்!

புதன், 12 ஜூலை 2017 (10:41 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மீன்வர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதினார். மீனவர் பிரச்சனைக்கு காரணமான கட்சத்தீவையும் மீட்பேன் என் அவர் சபதம் ஏற்றார்.


 
 
இந்த மீனவர் விவகாரம் நேற்று சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
 
நேற்று திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி இலங்கையில் தமிழக மீனவர்கள் 60 பேரும் 160 படகுகளும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்றார். இதற்கு பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மீனவர்கள் பிரச்னைக்கு காரணம் கட்சத்தீவை தாரை வார்த்தது தான்.
 
அந்த  கட்சத்தீவை மீட்டு அதனை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். பாரம்பரிய பகுதியில் நம் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என இலங்கை கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
 
இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், கச்சத்தீவை தாரை வார்த்தது மத்திய அரசு தான். தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், வழங்கி விட்டனர். இதனை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன். மேலும் அது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அதிமுக பங்கேற்கவில்லை.
 
இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் ராமசாமி, அன்றைக்கு இருந்த சூழலில் கச்சத்தீவு வழங்கப்பட்டது. இன்றைக்கு, என்ன நிலவரம் என, விவாதியுங்கள். ஜெயலலிதா பல முறை கச்சத்தீவை மீட்போம் என்றார். ஆனால், மீட்கவில்லை. இன்று என்ன செய்ய வேண்டும் என விவாதித்தால், சிறப்பாக இருக்கும் என்றார்.
 
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார் கட்சத்தீவை ஜெயலலிதா மீட்பேன் என உறுதியளித்தார், அவரது வழியில் செயல்படும் இந்த அரசு கட்சத்தீவை மீட்கும் என்றார். இதனையடுத்து அமைச்சர் ஓஎஸ் மணியன் பேசினார்.
 
அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம், தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் மத்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்ததை கண்டித்து பதவியை ராஜினாமா செய்யுங்கள் என அவர் கூறினார். திமுக அதனை ஏற்காததால் தான் அவர் வெளிநடப்பு செய்தார் என்றார் ஓஎஸ் மணியன். இவ்வாறு கட்சத்தீவு குறித்து விவாதம் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்