உப்பு நீராக மாறும் நிலத்தடி நீர்.! 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு..! தடுப்பணை கட்ட கோரி ஆர்ப்பாட்டம்..!

Senthil Velan

வியாழன், 8 பிப்ரவரி 2024 (09:57 IST)
கடலூர் மாவட்டம் புவனகிரி உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தலைமையில்  ஆதிவராகநல்லூரில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வலியுறுத்தி அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆதிபராக நல்லூரில் கடலில் உட்பகுவதை தடுக்க தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக தமிழக அரசு தொடங்க வலியுறுத்தி அதிமுக சார்பாக புவனகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
அதன்படி புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புவனகிரி எம் ஜி ஆர் சிலை அருகே ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசு வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராக நல்லூர் என்ற கிராமத்தில் கடல் நீர் உட்பகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வலியுறுத்தி   கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உருவாகும் வெள்ளாறு பெரம்பலூர் வழியாக  கடலூர் மாவட்டத்தில் பயணித்து மணிமுத்தாற்றுடன் இணைந்து புவனகிரியை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே வங்க கடலில் கடலில் கலக்கிறது. 
 
மேலும் பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆதிபராக நல்லூர் என்னும் பகுதியில் வெள்ளாற்றின் வழியாக கடல் நீர் உட்புகுவதால் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. 
 
இதனால் நிலத்தடி நீரை விவசாயத்திற்கு குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதால் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
 
வெள்ளாட்டின் குறுக்கே ஆதிவராக நல்லூரில் தடுப்பணை கட்ட கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

ALSO READ: எருமை கிடா வெட்டும் வினோத நிகழ்ச்சி..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!!
 
இந்நிலையில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதிக உப்பு நீராக மாறிவரும் நிலையில் உடனடியாக தமிழக அரசு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்