தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க ரூ.60 கோடி பேரம் பேசியதாக, தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக யாகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் செய்த விசாரணையை அடுத்து, தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார் அவருக்கு அளித்த சம்மனை அடுத்து, கடந்த 22ம் தேதி அவர் டெல்லிக்கு சென்றார்.
இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னும், தினகரனிடமிருந்து தெளிவான பதிலை டெல்லி போலீசாரால் பெற முடியவில்லையாம். தினகரன் தரப்பு யாகேஷ் சந்திரசேகருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்), தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட ஆதாரங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு, இல்லை, தெரியாது, இம்பாசிபிள் என ஒற்றை வார்த்தைகளிலேயே தினகரன் பதில் அளித்துள்ளார். மேலும், யாகேஷ் ஒரு நீதிபதி என நினைத்து பேசினேன் என அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே, அதில் திருப்தியடையாத டெல்லி போலீசார், இன்று மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இன்றும் அவர் மழுப்பிய படியே பதிலளித்தால் அவர் கைது செய்து விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.