ஜெ.வின் குரல் அப்படியே.. தீபா பேச்சைக் கேட்டு உருகிய பெண்கள்

வெள்ளி, 6 ஜனவரி 2017 (08:40 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குரல் அப்படியே அவரின் அண்னன் மகள் தீபாவிற்கு இருப்பதாக அதிமுகவை சேர்ந்த பெண்களும், பொதுமக்களும் பேசிக்கொள்கிறார்கள்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுகவினர், அந்த கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று அவரை நேரில் பார்த்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
சமீபத்தில், சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சில தொண்டர்கள் சென்றனர். அவர்களின் கோஷங்களை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த தீபா, வீட்டின் பால்கனியில் இருந்து அவர்களை சந்தித்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில், உற்சாகமான தொண்டர்கள் உணர்ச்சி மிகுதியில் அவரை அரசியலுக்கு வரும்படி அழைத்தனர்.
 
அப்போது பேசிய தீபா, கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். அத்தையின்(ஜெயலலிதா) புகழை காப்பற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறியதோடு, இரட்டை இலை சின்னத்தை விரலால் காட்டி அவர்களை அனுப்பி வைத்தார்.
 
அப்போது அங்கிருந்த பெண்கள் தீபாவின் குரல் ஜெ.வின் குரலை போலவே இருக்கிறது என வியப்பாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.  ஏற்கனவே, அவர் தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த போது கூட அவர் ஜெயலலிதாவைப் போலவே பேசுகிறார் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். 
 
தீபாவின் குரல் மற்றும் பேசும் ஸ்டல் ஜெ.வை போலவே இருப்பது, பெண்கள் மத்தியில் அவர் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்