பெண் டி.எஸ்.பி.தற்கொலை செய்து கொண்டதற்கு முதலமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்: விஜயகாந்த்

ஞாயிறு, 20 செப்டம்பர் 2015 (08:43 IST)
பெண் டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  தமிழக எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம், இந்தியாவிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது.தமிழக காவல்துறையில் பெண்அதிகாரியாக பணியாற்றிய, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு துணைக்கண்காணிப்பாளர் (DSP) விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்".
 
"இச்சம்பவம் காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பணிக்கு வந்து ஏழு மாதமேயான நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எந்த நிர்ப்பந்தம் காரணமாக அவர்  உயிரை மாய்த்துக்கொண்டார் இது குறித்த உண்மையை தமிழக மக்களுக்கு அதிமுக அரசு தெரியப்படுத்தவேண்டும்".
 
"தமிழ்நாட்டில் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் நிலையில், அவரது துறையின்கீழ் நேரடி கண்காணிப்பில் பணியாற்றும், பெண் துணைக்கண்காணிப்பாளர் தற்கொலை செய்துகொண்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்"
 
"நான், நான் என்று சொல்லும் ஜெயலலிதா  அவர்கள், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அடுத்தவர் மீது பழியைப் போட்டுவிட்டு, தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல ஒதுங்கிக்கொள்ளக்கூடாது. காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பெண்களின் உரிமை குறித்த மகாத்மா காந்தியின் கனவும், மகாகவி பாரதியின் பாட்டும், தந்தை பெரியாரின் சீர்திருத்தமும் தமிழகத்தில் கேள்விக்குறியாகிவிடும்".
 
"எனவே பெண்காவல்துறை அதிகாரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறும் அவரது தந்தையின் கோரிக்கையை ஏற்று, நேர்மையான விசாரணை நடத்திட, சிபிஐ விசாரணைக்கு அதிமுக அரசு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு இந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்."

வெப்துனியாவைப் படிக்கவும்