மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தில் 9.5.2007 அன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவீச்சு தாக்குதலுக்கு அப்போது தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு ஒன்று காரணமாக சொல்லப்பட்டது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அட்டாக் பாண்டி (பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் ) உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை 9.12.2009-ல் சிபிஐ விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பிலும் உயிரிழந்தவர்களின் பெற்றோர் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்
முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் ‘குற்றவாளிகளான அட்டாக்பாண்டி, பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வெடி மருந்து சட்டம் உட்பட 5 பிரிவுகளுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளனர்.