புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனப் பல மாதங்களாக தமிழக அரசிடம் தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காததால் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 11 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் தேர்வுக் காலம் நெருங்கி வருவதால் இந்த வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுப்பபட்டுள்ளது. இது சம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதிகள் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் ‘ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த போராட்டம் முடியும் வரை தனியார்ப் பள்ளிகளின் செய்லபாட்டையும் நிறுத்த சொன்னால் அதற்கு நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா ?.தேர்வு நேரத்தைக் கணக்கில் கொண்டு நீங்கள் போராட்டத்தை நடத்துவது ஏன் ? எவ்வளவு பட்டதாரிகள் குறைவான சம்பளத்தில் மிகக் கடினமான வேலைகள நாள் முழுவதும் செய்து வருகின்றனர் தெரியுமா ?’ எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.