போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கை – அரசுக்குத் தடை விதித்த நீதிமன்றம் !

சனி, 9 நவம்பர் 2019 (08:08 IST)
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மேல் அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களின் இடங்களை காலி இடங்களாக அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் பணிக்குத் திரும்பிய பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ என சொல்லப்படும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசும், பணி மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டன. இந்நிலையில் மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கெதிராக மனுத்தாக்கல் செய்தனர். அதில் ‘அரசு அளித்த உத்தரவாதத்தால்தான் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் அதை மீறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தனர்.

இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம்  மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தடை விதித்தது. மேலும் இது சம்மந்தமாக விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்