'சகித்துக் கொள்ள முடியவில்லை' - கோபமாக வங்கிக்கு கடிதம் எழுதிய விவசாயி

திங்கள், 14 நவம்பர் 2016 (12:48 IST)
என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, எனது சேமிப்பு கணக்கை கேன்சல் செய்து எனது இருப்பு தொகையை உடனே வழங்குக என்று விவசாயி ஒருவர் வங்கிக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.


 

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நாடு முழுவதும் மக்கள் திண்டாடி வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டி உள்ளது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, தம்பிக்கோட்டை வடகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி அன்பழகன். இவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு, தனது கணக்கை முடித்துக்கொண்டு இருப்பை வழங்குக என கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில், “நான் உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு (சேமிப்பு கணக்கு எண்) வைத்துள்ளேன். நான் வங்கிக்கு வரும்போதெல்லாம், நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டு, அதிகம் வைப்பு தொகை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வங்கியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது.

மேலும் ஏழை எளிய தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டது என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, எனது சேமிப்பு கணக்கை கேன்சல் செய்து எனது இருப்பு தொகையை உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அன்பழகன்.”

இந்தக் கடிதத்தின் நகல்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகத்துக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்