தேர்தல் வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றிவிட்டது என்று சொல்வதற்கு பதிலாக, "எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிவிட்டார்" என அதிமுக கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது, "திமுக 64 பக்க தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் அவர்கள் சொன்னதை நிறைவேற்றவில்லை. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 520 வாக்குறுதிகள் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றினார். அதேபோல் பாராளுமன்ற தேர்தலிலும் 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்று வரை திமுக ஏமாற்றியுள்ளது," என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசியதில், "வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர் திமுக" என்று கூறுவதற்கு பதிலாக "எடப்பாடி பழனிச்சாமி" என்று கூறியது தான் கூட்டத்தில் இருந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின், அவர் தனது தவறை உணர்ந்து திருத்தியுள்ளார். இதனால் சில நிமிடங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.