”தொடர்ச்சியா வன்கொடுமை செய்வாங்க” – அன்புஜோதி ஆசிரமத்தில் தப்பித்த பெண் வாக்குமூலம்!

வியாழன், 2 மார்ச் 2023 (09:18 IST)
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து தப்பித்த பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட ஜபருல்லா என்ற நபர் காணாமல் போனதாக வந்த புகாரின் பேரில் கடந்த மாதம் போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த ஆசிரமத்தில் பல வன்கொடுமை, துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தது கண்டறியப்பட்ட நிலையில் ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த ஆசிரமத்தில் குற்றச் செயல்கள் நடந்தனவா என்பது குறித்து காவல்துறை மற்றும் தேசிய, மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தியதில் அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், மேலும் பலரை கட்டி வைத்து அடித்து துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஆசிரமத்திலிருந்து 16 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது. ஆசிரமத்தில் இதுநாள் வரை தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரம உரிமையாளர் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த ஊழியர்கள் மேல் பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், துன்புறுத்துதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் கெடார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “அவர்களது கொடுமை தாங்க முடியாமல் 2 முறை தப்பிக்க முயற்சி செய்தேன். அங்கு இருக்கும் வயதானவர்களிடம் உள்ள பணம், நகைகளை அடித்து பிடுங்கிக் கொண்டார்கள். ஆசிரமத்தில் சேரும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் என்னிடம் கதறி அழுதுள்ளனர். எதற்கெடுத்தாலும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும், சங்கிலியால் அடித்தும் சித்ரவதை செய்வார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே அன்புஜோதி ஆசிரமத்தில் இதுவரை 2 பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருந்த நிலையில், பெண்ணின் வாக்குமூலம் மூலமாக மேலும் 2 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோல எத்தனை பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்பே தெரியவரும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்