நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.! 3 ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு.!!

Senthil Velan

வியாழன், 11 ஜூலை 2024 (16:42 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் துணை வட்டாசியர்களுக்கு வட்டாசியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதை எதிர்த்து, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த துணை வட்டாசியர் எஸ்.சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த துணை வட்டாசியர் வேலு உள்பட துணை வட்டாசியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறையில் வட்டாசியர் பதவி உயர்வு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தாததால் துணை வட்டாசியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 

ALSO READ: சாட்டை துரைமுருகன் கைதுக்கு அதிமுக கண்டனம்.! கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்.!

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வருகிற 27 ஆம் தேதி வருவாய்த்துறை செயலாளர் வி.ராஜாராமன், ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சராயு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவர்கள் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்