சிறு வணிகர்கள் பயன்பெறும் சமாதான திட்டம்: சட்டமன்றத்தில் முதல்வர் அறிமுகம்..!

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (11:58 IST)
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டத்தை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
 
இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இதில் அவர் கூறியபோது, ‘வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். 
 
அரசுக்கு வரவேண்டிய வருவாயும்  வராமல் உள்ளது, நிலுவையில்  உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர். அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது 
 
 மேலும் வணிகர்கள், வணிகவரித்துறை இடையிலான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூபாய் 50,000க்கு கீழ் வரி வட்டி அபராத தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் ரூபாய் 10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வருகை செலுத்தினால் போதும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வணிகர்களால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி வட்டி அபராதம் நிலுவையில் உள்ளது என்றும் பழைய நிலுவைத் தொகையை வசூலிக்க சமாதான திட்டத்தை கொண்டு வருகிறோம் என்றும் வணிகர்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதில் நான்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல் முறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது  
 
அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்