அப்பல்லோவில் நேற்று: ஜெயலலிதாவால் மகிழ்ந்த சசிகலா!

வெள்ளி, 21 அக்டோபர் 2016 (12:18 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 வாரமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நேற்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வருகின்றன.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை காரணமாக அவருக்கு வலி தெரியாமல் இருக்க செடேஷன் எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் மயக்க நிலையில் இருக்கும் முதல்வர் அவ்வப்போது சில நிமிடங்கள் தான் இயல்பு நிலைக்கு திரும்புவார்.
 
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக முதல்வர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தை அதிகப்படுத்த அப்பல்லோ மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். அதன் பயனாக முதல்வர் 5 நிமிடம் இயல்பு நிலையில் இருந்தார்.
 
பின்னர் இந்த நேரத்தை படிப்படியாக அதிகரிக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டனர் மருத்துவர்கள். மருத்துவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக முதல்வர் ஜெயலலிதா நேற்று 8 மணி நேரம் மயக்க நிலைக்கு வெளியே, இயல்பு நிலையில் இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
 
இதனால் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் அவரை அருகில் இருந்து கவனித்து வரும் சசிகலாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே மற்றும் எயிம்ஸ் மருத்துவர்கள் மீண்டும் வர உள்ள நிலையில் முதல்வரின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்த திட்டம் தெரியும்.
 
முதல்வர் படிப்படியாக இயல்பு நிலைக்கு வருவதால், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருப்பதால் விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என அப்பல்லோ வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்