கரும்புத் தோட்டத்தில் நடந்தது என்ன?: சிதறிக் கிடந்த உடல் உறுப்புகள்!
புதன், 19 ஜூலை 2017 (16:56 IST)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் குழந்தையின் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி அருகே பைங்கா நாடு காலனித் தெருவில் வசிக்கும் சோமு என்பவருக்கு அந்த பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கரும்புத் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த கரும்புத் தோட்டத்தில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையின் கை, கால்கள் சிதறி கிடந்துள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள சிறுவன் ஒருவன் பார்த்துள்ளான். அந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடல் உறுப்புகளை கைப்பற்றி மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த குழந்தையின் உடல் உறுப்புகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.