நெருங்கும் நவம்பர், டிசம்பர்; மழையால் மீண்டும் சென்னைக்கு ஆபத்தா??
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (10:04 IST)
கடந்த இரு வருடங்களாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு ஏதோ ஒரு அபாயம் ஏற்படுகிறது. இந்த வருடம் மழையால் மீண்டும் ஆபத்து வருமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை வரும் ஒன்றாம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ஆனால், தென்மேற்கு பருவமழை தனது இயல்பைவிட அதிகம் பெய்தது.
தற்போது, வடகிழக்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக துவங்கினாலும் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என கூறப்படுகிறது.
அதோடு, வங்க கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் சில இடங்களில் மிதமான மழையும் கனமழையும் பொழிவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் கனமழை எப்பொழுது இருக்கும் என்பதை 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பாகதான் கணிக்க முடியும் எனவும் சென்னை மழை மற்றும் புயல் வெள்ளதால் மூழ்கும் என வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.