சென்னை அருகே எண்ணூர் சிவகாமி நகரை சேர்ந்தவர் சரவணன். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சரவணன் நேற்று கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ் தலை நசுங்கி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தன்று சரவணன் அவரது கூட்டாளி ரகு என்பவரிடம் மதுபாட்டில் கேட்டுள்ளார். ரகு மது இல்லை என்று சொன்னதால் சரவணனுக்கும், ரகுவுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
சில மணி நேரங்கள் கழித்து தனது கூட்டாளிகளுடன் வந்த ரகு மது அருந்தலாம் என சொல்லி சரவணனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய பின்னர் ரகு மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து சரவணனை கல்லாலும், இரும்பு ராடாலும் அடித்துக் கொன்றுள்ளனர். இதையடுத்து போலீஸார் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.