மாரிதாஸ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு!
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (08:07 IST)
பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் என்பவர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை மிரட்டியதாகவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செய்தி ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும், அவரது செயலால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் திரு. வினய் சரவாஹி கடந்த 10.7.2020-ம் தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை புலன் விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மாரிதாஸை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித்தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸ் செயல்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் செய்து இருந்தது.
சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூறுகிறோம். தாமதமானாலும் தற்போது இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்.
தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்தி அவர்களை பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசும் மனப்போக்கு ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலகுவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவரொருவர் முன்னெடுத்த ஆளும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க படவேண்டும். சமூக விரோத சக்திகளிடமிருந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள் அரசியல் கட்சியினர் என அனைத்து செயல்பாடுகளும் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.