கார்டு மேல 14 நம்பர் சொல்லு சார்..! உஷார் மக்களே! – சென்னையில் மோசடி!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏடிஎம் எண்ணை வாங்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சென்னையில் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கியிலிருந்து பணத்தை நொடி பொழுதில் அனுப்பும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதே தொழில்நுட்பத்தால் பணத்தை ஏமாற்றும் மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சமீப காலமாக வங்கியிலிருந்து போன் செய்வது போல பேசி ஏடிஎம் கார்டு எண்ணை பெற்றும் பணம் திருடும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் வசித்துவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சதாசிவம் என்பவருக்கு சமீபத்தில் இந்தியன் வங்கியின் மேனேஜர் பேசுவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என கூறி ஏடிஎம் கார்டு எண்ணையும், ஒடிபி போன்றவற்றையும் கேட்டுள்ளனர். அவரும் மேனேஜர்தான் அழைப்பதாக எண்ணி அனைத்து தகவல்களையும் தந்த நிலையில் அவரது வங்கி கணக்கிலிருந்து 25,000, 30,000 என்று தொடர்ந்து பணம் குறைந்து வந்துள்ளது. இதுகுறித்து பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதே போல பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த மருத்துவர் லீலா ராமகிருஷ்ணன் மற்றும் அயனாவரம் பகுதியில் வசித்து வரும் சுகன்யா ஆகியோரிடமும் நூதனமான முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல வங்கி அதிகாரி பேசுவதாக “கார்டு மேல உள்ள 14 நம்பர் சொல்லுங்க சார்” என வரும் போன் கால்கள் குறித்த ஆடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையிலும் இவர்கள் ஏமாந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த காரணம் கொண்டும் வங்கி அதிகாரிகள் என யார் பேசினாலும் ஏடிஎம் கார்டு எண், பின் நம்பர், ஓடிபி போன்ற தகவல்களை பகிர வேண்டாம் என வங்கிகளும், காவல்துறையினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்