சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்றும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட்..!

Siva

வியாழன், 4 ஜூலை 2024 (08:36 IST)
சென்னை மற்றும் புறநகரில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் சென்னை உள்பட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் மாலை மற்றும் இரவில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று இரவு சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் இந்த ஆறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் உள்ளவர்கள் இன்று வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்