கடந்த வருட இறுதியில் எதிர்பார்த்த வட கிழக்கு பருவமழை தமிழகத்தை ஏமாற்றியது. மேலும், கியாண்ட், நடா மற்றும் வர்தா என மூன்று புயல்கள் உருவாகின. ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்று வீசியது. ஆனால், மழை பெய்யவில்லை. பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதன் பின்னும் தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை. இதனால் தமிழகத்தில் உள்ல ஆறுகள், ஏரிகள், அணைகள் மற்றும் குளங்கள் அனைத்தும் வரண்டு போயுள்ளன.
இந்நிலையில், வங்கக் கடலில் இலங்கைக்கு தெற்கே, பூமத்திய ரேகையை ஒட்டி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது படிப்படியாக வலுப்பெற்று அந்தமான் அருகே புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அந்த புயல் வருகிற 11ம் தேதி சென்னை அல்லது நெல்லூர் கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும், அப்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.