இரண்டு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் ஓடத் தொடங்கிய பேருந்துகள்: பொதுமக்கள் வரவேற்பு

திங்கள், 1 ஜூன் 2020 (08:09 IST)
தமிழகத்தில் ஓடத் தொடங்கிய பேருந்துகள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் ஓடாத நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.
 
இன்று முதல் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அவற்றில் ஒன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50 வீத பேருந்துகள் ஜூன் 1 முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கின. ஏற்கனவே 8 மண்டலங்களாக போக்குவரத்து கழகம் பிரிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்குள்ளும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்துகளில் பயணிகள் பின்பக்க படிக்கட்டுக்கள் மூலம் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதும் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் கிருமி நாசினி கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் பேருந்தில் 60% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளை இயக்குவதற்கு முன் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டதாகவும் டிரைவர் கண்டக்டர்கள் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இரண்டு மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் இப்போதைக்கு மண்டலத்திற்கு உள்ளாவது செல்லும் வகையில் பேருந்துகள் ஓடத் தொடங்கியது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விரைவில் தமிழகம் முழுவதும் செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் பேருந்துகள் ஓடுவதால் சாலைகளும் பரபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்