திருவண்ணாமலை அருகே ஹோட்டலுக்குள் புகுந்த பேருந்து: 5 பேர் உயிரிழப்பு

புதன், 29 ஏப்ரல் 2015 (11:43 IST)
மதுரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து, தென்மாத்தூர் அருகே சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன்  அரசு பேருந்து ஒன்று இரவு 10 மணியளவில் புறப்பட்டு வந்தது.
 
அந்தப் பேருந்து திருக்கோவிலூர் தாண்டி திருவண்ணாமலை நோக்கி வந்தது கொண்டிருந்தபோது, தென்மாத்தூர் அருகே அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி, தென்மாத்தூர் கூட்டு ரோட்டின், சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது.
 
அப்போது, அங்கு டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீதும், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீதும் அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக மோதியது.
 
இந்த விபத்தில் தென்மாத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்த சீமான், ஏழுமலை, அருணாசலம், ரங்கன், ராமலிங்கம் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
 
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, முனுசாமி, தாணல் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் முனுசாமி, தாணல் ஆகிய 2 பேரும், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
 
இந்த விபத்துக்கு காரணமான ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில், 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து தென்மாத்தூர் கூட்டு ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெறையூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
 
காவல்துறையினர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஞானசேகரன் ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து பேசினர். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
 
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2,500 இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறினார்.
 
இது குறித்து வெறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்