பாஸ்போர்ட் எடுப்பது என்றால் ஒரு பெரிய விஷயம் என்ற நிலை மாறி தற்போது ஆன்லைனிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை வந்து எளிதான விஷயமாக மாறிவிட்டது. இந்நிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ஏப்ரல் 8-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று அதாவது ஏப்ரல் 4-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என் பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். தத்கல் என்ற உடனடி பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 'சுமார் 2,500 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின் மூலம் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.