வேலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன், 30 ஜூலை 2014 (19:23 IST)
வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் இன்று (புதன்கிழமை) வந்ததை அடுத்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆபத்தான பொருளும் சிக்கவில்லை.
 
காந்தி நகரில் உள்ள வாணி வித்யாலயா வழக்கம்போல் புதன்கிழமை காலை செயல்படத் தொடங்கியது. இப்பள்ளியில் பயிலும் 1,700 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் வேலூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு யாரோ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பள்ளியின் பெயரை குறிப்பிட்ட அப்பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து உடனடியாக காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, அருண்குமார் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மோப்ப நாய் லூசி வரவழைக்கப்பட்டு அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இச்சோதனையில் வெடிகுண்டை கண்டறியும் நவீன கருவி ஒன்றும் பயன்படுத்தப்பட்டது.
 
இந்த சோதனையில் பள்ளி வளாகத்தில் எந்த ஆபத்தான பொருளும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு புரளியால் காட்பாடி பகுதியில் காலையில் பெற்றோரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்