கருணாநிதி மீது பாயும் தமிழிசை: மோடியை பற்றி தவறாக பேசுவதா

சனி, 4 ஜூன் 2016 (11:41 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசி கருணாநிதி தேர்தல் முடிவு வரும் முன்னரே பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது ஏன்? இது தான் தேர்தல் முடிவை மாற்றியது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


 
 
இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பரப்புரை முடிந்து ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் பொய் உரையை தனது பிறந்த நாள் உரையாக ஆற்றி இருக்கிறார் என்றார்.
 
மேலும், திமுகவின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என திமுகவினரே சொல்லும் போது மோடி மீது குறை சொல்வது வியப்பை தருகிறது. திமுக பல இடங்களில் வெற்றி பெற்றிருப்பது 2ஜி பண பலத்தால் தான். அதிமுக ஆட்சி அமைந்ததற்கு மோடி சொன்ன வாழ்த்தே காரணம் என தவறான கருத்தை பரப்புவது கண்டனத்திற்குரியது.
 
10 மணிக்கே மோடி வாழ்த்து சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பறிபோய்விட்டது என்று புலம்புகிறார். மோடி அவர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பதிவு செய்து இருப்பது சரியாக காலை 11:15 மணிக்கு. வெற்றிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் 11.15 மணிக்கு தமிழகத்திற்கு வாழ்த்து சொன்னார்.
 
அதற்குமுன்னரே 11.14 மணிக்கு மேற்கு வங்கத்திற்கும், 11.23 மணிக்கு அசாம்முக்கும், 11.26 மணிக்கு கேரளாவுக்கும் தன் கருத்தை பதிவு செய்து இருக்கிறார் மோடி. அப்படி என்றல் எல்ல தேர்தல் முடிவுகளும் அவரது வாழ்தால் மாறியதா? சுமார் 18 ஆண்டுகள் மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்த கலைஞர் இதைதான் செய்தாரா?
 
தமிழகத்தில் வாழ்த்து சொல்லி தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்றால் மோடி அவர்கள் ஏன் டெல்லி சட்டமன்ற முடிவுகளை மாற்றவில்லை பீகாரில் எப்படி எதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்தார்கள்? என தமிழிசை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்