தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் இந்த சூழலில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுகவில் தங்களுக்கான ஆதரவு அணியை பாஜக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா 1 மாத காலமாக மருத்துவமனையில் இருப்பதால் அரசியல் காய்களை பாஜக நகர்த்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கத்திலேயே பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக பேசப்படுகிறது.
தம்பிதுரையை பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வராக்க பாஜக முயற்சித்ததற்கு சசிகலா தரப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே ஜெயலலிதா வசம் இருந்த துறைகளை ஓ.பி.எஸ்.க்கு கொடுக்க வேண்டும் என அடுத்த நெருக்கடியை கொடுத்தது மத்திய அரசு.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தான் அந்த பொறுப்புகளை கவனிப்பார் என சசிகலா தரப்பு கூற மத்திய அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை, கடைசியில் மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்க முடியாத சசிகலா தரப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகளை கொடுக்க சம்மதித்தது.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக்குவிப்பு விவகாரங்களை வைத்து அவரையும் தங்கள் வழிக்கு பாஜக கொண்டு வந்துள்ளதாக பேசப்படுகிறது. தற்போது தம்பிதுரையின் ஆலோசனையின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் வழிகாட்டுதல் என அதிமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
இதனால் அதிமுகவில் உள்ள சில அமைச்சர்கள் தற்போது பாஜக ஆதரவான இந்த அணியில் ஐக்கியமாகி உள்ளது. இதனால் சசிகலா தரப்பு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.