கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி : பாரதிராஜா ஆவேசம்

திங்கள், 16 ஏப்ரல் 2018 (16:43 IST)
ரஜினிகாந்த் கர்நாடக காவியின் தூதுவர் என்று கடுமையாக சாடியுள்ளார்  இயக்குனர் பாரதிராஜா.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10-ம் தேதி சென்னை வாலஜாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில் சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது.
 
அந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

 
 
இந்நிலையில், ரஜினியின் இந்த கருத்து குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் காவலர்கள் தமிழர்களை துரத்தித் துரத்தித் அடித்த போதும், தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனத்தை அடித்து நொருக்கிய போதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்த போதும், வாய் திறக்காத நீங்கள் இன்று, தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜவாழ்கை வாழ்ந்து கொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.
 
சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான், எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன், அல்லது. இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவன், செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம்.
 
நடந்த போராட்டம் தனிமனிதர்களுக்கானது அல்ல, என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டுக் குடிதண்ணீர்க்கும் சேர்த்துதான், எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர், காவல்துறையினர் நடத்திய தடியடியில் ரத்தம் சிந்தினார்கள், என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பேசும் போது, எதைப்பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். 
 
இல்லையென்றால், எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படூவீர்கள், அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை எனபதையும் நீங்கள் உணர்வீர்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்