நிறுத்துங்கள்! இல்லையேல் அது ஐ.பி.எல் விளையட்டாக இருக்காது : எச்சரிக்கும் பாரதிராஜா

வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:12 IST)
சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை நிராகரிப்போம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. 
 
அந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இதே கருத்தை பாராதிராஜாவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும், போராடாமலே இருக்கிறோம். உறைந்து போய்க் கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு, நம்மைப் புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும்போது, ஐபிஎல் எனும் மாய உலகத்துக்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசிய புரட்சிக்கு தீ வைக்கும், முட்டாள்தனமான விளையாட்டை நிராகரிப்போம்.
 
தமிழ் மக்களின் ஒற்றுமை கரு, கூடிவரும்போது, கருக்கலைப்பு செய்யவரும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தடை விதிப்போம். தமிழா! ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி. நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல. புரட்சியின் மைதானம். தமிழனை விளையாட்டாக நினைத்து கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் எங்கள் தமிழர்களுக்கு வீர விளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். இது எச்சரிக்கை அல்ல. அன்பு சுற்றறிக்கை.
 
உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மீறி நடந்தால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது. மாறாக எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் களம் காணுவார்கள் என்பதைத் தமிழ் இன உணர்வோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்