சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை

வெள்ளி, 17 நவம்பர் 2017 (17:07 IST)
2100ஆம் ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்கும் என கடற்கரை வள மையம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.


 

 
இதுகுறித்து கடற்கரை வள மையத்தை சேர்ந்த பூஜா குமார் கூறியதாவது:-
 
2100ஆம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் சென்னை கடலில் மூழ்கும், மொத்தம் 3 ஆயிரத்து 29 சதுர கி.மீ நிலப்பரப்பு கடலால் விழுங்கப்படும். இந்த பகுதிக்குள் இருக்கும் குடியிருப்பு பகுதிகள், கட்டுமானங்கள் அனைத்தும் அழிந்து போகும். 
 
இதை இஸ்ரோவின் துணை ஆய்வு மையம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அதேபோல் இந்த அறிக்கை அடிப்படையில் சென்னை எம்.ஐ.டி நிபுணர்களும் ஒரு ஆய்வு மேற்கொண்டு அரசிடம் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதுவும் வெளியிடப்படவில்லை. 
 
வடசென்னை கடற்கரை ஓரமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இந்த எச்சரிக்கை பகுதியில்தான் அமைந்துள்ளன. கண் எதிரில் ஆபத்து தெரிகிறது. இனி அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.
 
கடற்கரை ஓர மண்டல மேலாண்மை திட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையையும் அரசு மறைத்துவிட்டது.
 
இந்த அறிக்கையில் 2050ஆம் ஆண்டிற்குள் சென்னையில் 10 லட்சம் மக்கள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே கடற்கரையில் சுற்று சூழலை பாதுகாத்தல், இயற்கை சூழலை பார்த்தல், புவி வெப்பமாதல், கடல் மட்ட உயர்வு என அனைத்தையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்