அடித்து உதைத்த போலீஸ்; ஆட்டோ டிரைவர் மரணம்?

ஞாயிறு, 28 ஜூன் 2020 (16:08 IST)
தென்காசி அருகே போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக பரபரப்பு. 
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தனர்.  
 
இந்நிலையில் இதேபோல தென்காசியில் போலீஸாரின் அராஜகம் நிகழ்ந்துள்ளது. குமரேசன் மீது செந்தில் என்பவர் இடப்பிரச்சினை தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் கடந்த மே 8 ஆம் தேதி அன்று போலீசார் விசாரணைக்கு குமரேசன் சென்றுள்ளார். 
 
பின்னர் 10ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது போலீஸார் அவரை கடுமையாக அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி குமரேசனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
 
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவர்களிடம் போலீஸார் தன்னை கடுமையாக அடித்ததாக கூறியுள்ளார். இதன்பின்னர் குமரேசனின் கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அறிந்துள்ளனர். 
 
எனவே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த் நிலையில் சிகிச்சை பலனின்றி குமரேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்