வறட்சி நிவாரணமாக கர்நாடக மாநிலத்திற்கு 3454 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி மட்டுமே அறிவித்திருப்பதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வறட்சி நிவாரண நிதியாக ரூ.18 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கர்நாடக வலியுறுத்தியது. ஆனால் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்காததால், உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதன்படி 18000 கோடி ரூபாய் கேட்ட, கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக 38000 கோடி ரூபாய் கேட்ட தமிழக அரசுக்கு 275 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி உள்ளது. தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே என்றும் தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல, வன்மம், தீராத வன்மம் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.