ஜல்லிக்கட்டு கைவிடப்படுகிறது; ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து நேர்ந்தால்.... - அன்புமணி எச்சரிக்கை
திங்கள், 23 ஜனவரி 2017 (14:42 IST)
பின்னாளில் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து நேர்ந்தால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் கடுமையாக போராடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் எந்த தடையுமின்றி அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்; அவ்வாறு பிறப்பிக்கப்படவில்லை என்றால் குடியரசு நாளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தேன்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.
எனவே, தமிழகம் முழுவதும் குடியரசு நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கைவிடப்படுகின்றன. எனினும், பின்னாளில் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து நேர்ந்தால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் கடுமையாக போராடும்" இவ்வாறு கூறியுள்ளார்.