என்னங்கடா இது பித்தலாட்டமா இருக்கு... அமமுக கவுன்சிலர்கள் கடத்தல்!

வியாழன், 9 ஜனவரி 2020 (12:41 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமமுக கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுகவை விட குறைந்த இடங்களையே கைப்பற்றியது. ஆனால் அதிமுக கூட்டணி உள்ள பாமக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்ப்பார்த்ததை விட நல்ல வெற்றி விகிதத்தை பதிவு செய்தது. 
 
இதைத்தொடர்ந்து மறைமுக தேர்தலுக்காக பதவிகளை கைப்பற்றுவதற்காக மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை அழைத்துச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஆம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமமுக சார்பில் 13 வது வார்டு கவுன்சிலராக சுப்புலெட்சுமியும், 14 வது வார்டு கவுன்சிலராக மாடத்தியும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. 
 
15 கவுன்சிலர்கள் கொண்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 7 ஆகவும், திமுகவின் பலம் 5 ஆகவும் உள்ளது. எனவே ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்ற அமமுகவின் இரு கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் வந்ததையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்